Monday, January 22, 2007

நான் தேர்ந்தெடுத்த பாதையில்...

நான் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும், இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்திலும் கடமையாற்றும் சந்தர்ப்பம் கிடைத்ததின் மூலம் இருவேறு ஊடகங்களின் பணிபற்றிய ஒரு விளக்கமான அறிவைப் பெறுவது சாத்தியமாகியது. நான் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒரு தொழில்நுட்ப வியலாளராக இணைந்து கொண்டபொழுது ஒலிபரப்புத்துறையின் பல ஜாம்பவான்கள் அங்கு இருந்தார்கள்

வானொலி நாடகத்துறை என்றால் பி.பி.சி பயிற்சி பெற்ற சானா (சண்முநாதன்) அவர்கள், செய்தி வாசிப்பில் எஸ்.புண்ணியமூர்த்தி, வீ.ஏ.கபூர், எஸ். நடராஜன் போன்றவர்கள், வர்த்தகசேவையில் எஸ்.பி.மயில்வாகனம், நிர்வாகத்தில் கே.எஸ்.நடராஜா, திருமதி ஞானம் ரட்னம்,திருமதி பொன்மணி குலசிங்கம், சி.வி.இராசசுந்தரம் போன்றோர் எங்களைப் போன்ற இளையவர்களுக்கு வழிகாட்டிகளாக விளங்கினார்கள்.

இவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டதும், என் சக அறிவிப்பாளராக விளங்கிய நண்பர் ஜோர்ஜ் சந்திரசேகரன் போன்றவர்கள் மூலம் பரிச்சியமாக்கிக் கொண்ட பிறமொழி படைப்புகள், இலக்கியங்கள், நாடகங்கள் என்பன, என்னை இத்துறையில் வளர்த்துக் கொள்ள வழி கோலின.


ஒரு வானொலி அறிவிப்பாளருக்கோ, செய்தி வாசிப்பவருக்கோ வெறுமனே குரல்வளம் மட்டும் தகுதி தரப்போவதில்லை என்று நான் அறிந்திருந்தேன். ஒரு தகவலை வானொலி மூலமாக வழங்கும்போது அதை அறிவிப்பாளர் தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார் என்பதை அவரது குரலே நேயர்களுக்கு உணர்த்தும். எனவே ஒரு அறிவிப்பாளருக்கு இடையறாத தேடல் அவசியமாகின்றது. தன்னை அவர் தொடர்ந்து update பண்ணிக்கொள்ள வேண்டும்.

2 comments:

Vilasam said...

வாழ்த்துக்கள்

பி. விக்னேஸ்வரன் said...

விலாசம் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி