Monday, January 22, 2007

தமிழில் தொலைக்காட்சி நாடகங்கள்

ரூபவாகினி நிலையமானது இலங்கையில் கல்வி சம்பந்தமான நிகழ்ச்சிகளை வழங்குவதற்காகவே ஜப்பான் அரசாங்கத்தினால் அனபளிப்பாக வழங்கப்பட்டது. தொலைக்காட்சித்துறை தேசிய அளவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது உடனடியாக அதற்கான ஊழியர்களை பெறுவதே சிரமமானதாக இருந்ததினால் நேரே முன்னால் இருந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இருந்துதான் நிர்வாகிகள் முதல் தொழில் நுட்பவியலாளர்கள், தயாரிப்பாளர்கள் என்றெல்லாம் பெறப்பட்டார்கள். இந்த சந்தர்ப்பத்தில் தான் திருமதி இரத்தினம் அவர்களும், நானும் ரூபவாகினியின் தமிழ்ப்பிரிவில் இணைந்து கொண்டோம்.


"கண்ணாடி வார்ப்புகள்"
நான் இதற்குப் பிறகுதான் தொலைக்காட்சி நாடகத்தைப்பற்றி சிந்திக்கத்தலைப்பட்டேன். அதற்கான வசதிகள் இல்லாத நிலையிலும் ஆர்வத்துடன் நான் தயாரித்த முதலாவது தொலைக்காட்சிப்படைப்பு- பாலேந்திரா, ஆனந்தராணி நடித்த பிரபலமான மேடை நாடகமான "கண்ணாடி வார்ப்புகள்"தான். இந்த மேடை நாடகத்திற்காக கதிர்காமத்தம்பி என்பவர் உருவாக்கியிருந்த மேடை அமைப்பையே பின்னணியில் வைத்து மேடைநாடகத்தை அப்படியே படமாக்கி , தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்வித்தேன்.

-"கற்பனைகள் கலைவதில்லை" 27. 6. 1982
தொடர்ந்து முழுக்கமுழுக்க வெளிப்புறப்படப்பிடிப்பில் ஒரு தொலைக்காட்சி நாடகத்தை உருவாக்கும் எனது விருப்பத்தின் விளைவுதான "கற்பனைகள் கலைவதில்லை" என்ற தொலைக்காட்சி நாடகம். நான் வானொலி நாடகத் தயாரிப்பாளனாக இருந்த பொழுது தயாரித்த ஒரு வானொலி நாடகப் பிரதிதான் இது. தற்போது அவுஸ்திரெலியாவில் வசிக்கும் ஜெ.ஜெயமோகன் எழுதிய இந்த பிரதியை தொலைக்காட்சிக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்து கொண்டேன். வெளிவீடுகளிலும் தெகிவளை கடற்கரையிலும் படப்பிடிப்பு நடந்தது. நடராஜசிவம், விஜயாள் பீற்றர், சாந்தி சச்சிதானந்தன் ஆகியோர் நடித்தார்கள். மிகுந்த வரவேற்பை பெற்றது. தமிழில் தொலைக்காட்சி நாடகம் செய்யலாம் என்ற நம்பிக்கையையும் இந்த நாடகம் எனக்கு தந்தது. ரூபவாகினி 1982 பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டு,5 மாதங்களுக்கிடையில் தயாரிக்கப்பட்டு 1982 ஜூன் மாதம் 27ந்திகதி "கற்பனைகள் கலைவதில்லை" ஒளிபரப்பானது.


நடராஜசிவம் அண்மையில் ஒரு திரைப்படத்தில்


நிஜங்களின் தரிசனம்.. 26. 4.1983
அடுத்து நான் தயாரித்த தொலைக்காட்சி நாடகம் நிஜங்களின் தரிசனம். இந்த நாடகத்தின் பிரதியை நானே எழுதினேன். மீண்டும் வெளிப்புறப் படப்பிடிப்பு. பிரபல தொழில் அதிபர் ஒருவர் வீட்டிலும், கோல்பேஸ் கடற்கரை, தெகிவளை கடற்கரை என்பனவற்றில் படப்பிடிப்பு செய்தோம். வாழ்ககை பற்றிய மாறுபட்டசிந்தனைகள் கொண்ட இரண்டு அறை நண்பர்கள் பற்றிய கதை இது. ஒருவன் லட்சியவாதி. மற்றவன் யதார்த்தவாதி. இருவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொள்கிறார்கள். நண்பர்களாக எஸ். குணசிங்கமும், கே.எஸ். பாலச்சந்திரனும் நடித்தார்கள். மற்றைய பாத்திரங்களில் சாந்தி சச்சிதானந்தம், நிலானி நாகரட்னம், ரி.ராஜேஸ்வரன், இரா. பத்மநாதன், கோபால் சங்கர், ராகுலன் ஆகியோர் நடித்தார்கள்.

சிந்தாமணி பத்திரிகையினர் அப்போது, வானொலி, தொலைக் காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றி கருத்து தெரிவிக்கும் வகையில், "ஒலி ஒளி உருவம்" என்ற பகுதியை ஆரம்பித்திருந்தார்கள். அதில் "நிஜங்களின் தரிசனம்" பற்றி நீண்ட விமர்சனம் எழுதியதோடு "எடுத்த முடிவில் உறுதியுடையவர்களாக இருக்க வேண்டும்" என்று இந்த நாடகம் கூறிய கருத்தை வரவேற்று பாராட்டியிருந்தார்கள்.

ஆனால் நீண்டதொரு இடைவெளிக்குப் பிறகு இந்த நாடகம் மீண்டும் ரூபவாகினியில் ஒளிபரப்பானபொழுது, இதே பத்திரிகையில் "இந்த நாடகம் கூறிய கருத்து சமூகத்திற்கு ஒவ்வாதது" என்று எழுதினார்கள். ஒரே நாடகத்திற்கு இப்படி வேறுபட்ட விமர்சனங்கள் வந்தது எனக்கு ஆச்சர்யத்தைத் தந்தது. ஆனால் நாடகம் நன்றாக இருந்தது என்பதுதான் பொதுவான அபிப்பிராயம்.

உதயத்தில் அஸ்தமனம் 22. 3. 1984
யாழ்ப்பாணத்தில் அங்கு வாழும் கலைஞர்களைப் பயன்படுத்தி ஒரு தொலைக்காட்சி நாடகத்தை உருவாக்கவேண்டும் என்ற எனது விருப்பத்துக்கு ரூபவாகினி நிர்வாகம் சம்மதம் தெரிவித்தது. திருமதி ஞானம் இரத்தினம் அவர்கள் தலைமையில் ஒரு பெரிய தயாரிப்புக் குழுவே புறப்பட்டது.

பல தொழில்நுட்பக்கலைஞர்களுக்கு அதுவே முதல் யாழ்ப்பாண பயணம் என்பதினால் மிகுந்த thrill ஆகக் காணப்பட்டார்கள். இம்முறையும் நான் வானொலியில் தயாரித்த, இந்து மகேஷ் எழுதிய ஒரு வானொலி நாடகத்தையே, காட்சிப்புலனுக்குரியதாக மாற்றங்கள் செய்து கொண்டு, முக்கிய பாத்திரங்களில் நடிப்பதற்கு கலைஞர்களைத் தேடி யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.

பலரோடு தொடர்பு கொண்டு, ஆர்வமும் திறமையுமுள்ள புதிய கலைஞர்களை தெரிவு செய்து கொண்டேன். ராஜேஸவரன், றேமண்ட், குமுதினி, ராஜி இம்மானுவேல், கமல்ராஜ் ஆகிய இக்கலைஞர்களோடு, கே.எஸ்.பாலச்சந்திரன், எஸ்.எஸ்.கணேசபிள்ளை, பாக்கியம் கந்தசாமி, நிலானி நாகரட்ணம் போன்ற அனுபவமுள்ள கலைஞர்களை துணைப்பாத்திரங்களில் நடிக்கவைத்தேன்.

ஏறக்குறைய இரண்டு வாரங்கள் கந்தரோடை, காங்கேசன்துறை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. மாரிகாலத்துக்கு பிறகென்பதினால், வயல்களில் நெல்பயிர்கள், மரங்களில் செழித்த இலைகள் என்று பார்த்த இடம் எல்லாம் பச்சைப்பசேல் என்று தெரிந்தது.
எங்களோடு வந்த சிங்களத் தொழில்நுட்பக் கலைஞர்கள் யாழ்ப்ப்பாணத்தின் இந்த பசுமைத்தோறத்தினாலும், கிராம மக்களின் விருந்தோம்பலினாலும் மிகவும் கவரப்பட்டார்கள்.

படப்பிடிப்பு முடிந்து கொழும்பு திரும்பி, படத்தொகுப்பு, இசைச் சேர்ப்பு எல்லாம் நிறைவெய்திய பின் ஒளிபரப்பப்பட்ட போது இந்தத் தொலைக்காட்சி நாடகம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

'திரைப்படம்' போலிருக்கின்றது என்று பத்திரிகைகள் பாராட்டின. தென்னிந்திய சஞ்சிகையான 'சாவி' தனது தொலைக்காட்சிப் பக்கத்தில் வெகுவாகப் பாராட்டி எழுதியிருந்தார்கள்.

"சமூக சேவகி"

முழுக்க வெளிப்புறப் படப்பிடிப்பில் தயாரான எனது முன்குறிப்பிட்ட தொலைக்காட்சி நாடகங்களின் பின்னர், ஒரே ஒரு காட்சியைத் தவிர, முக்கிய்மான அனைத்து காட்சிகளையும் ரூபவாகினி உள்ளரங்கில்(Indoor) காட்சி அமைப்பு (Sets)செய்து தயாரான அடுத்த நாடகம் , எஸ். எஸ். கணேசபிள்ளை எழுதிய "சமூக சேவகி".

புத்தாண்டு சிறப்பு நாடகமாக ஒளிபரப்பாகிய இந்த நாடகத்தில், எஸ். எஸ். கணேசபிள்ளை, கே. எஸ். பாலச்சந்திரன், கமலினி செல்வராஜன், ஏ. எம். சி. ஜெயஜோதி, ஸ்ரீதர் பிச்சையப்பா, பிராங் புஸ்பநாயகம், றிச்சர்ட் ஜெயகரன் ஆகியோர் நடித்தார்கள்.

சமூகசேவை செய்யும் ஒரு இளம்பெண் , அடிக்கடி வங்கி அதிகாரியை தனது பணியின் நிமித்தம் சந்திக்கப் போக அவர்களுக்கிடையில் உறவு இருப்பதாக வதந்தி பரவ, அதனால் அவளின் வீட்டில் பிரச்சினை எழுகிறது. இறுதியில் சந்தோசமான முடிவு நேர்கிறது.


"நீண்ட கனவுகள்" 14. 6. 1988

மீண்டும் ஒரு வெளிப்புற படப்பிடிப்பில் தயாரான ஒரு நாடகம். நானே எழுதிய தொலைக்காட்சிப்பிரதியில் வித்தியாசமான ஒரு கதையை சொல்ல முயற்சித்தேன்.

ஒரு தொடர் மாடியில் எதிர் எதிர் கட்டிடத்தொகுதியில் ஒரு இளைஞனும், இளம்பெண்ணும் தினமும் கண்டு கொள்கிறார்கள். தன் மனதில் உள்ளதை சொல்லத் துணிவற்றவனாக இளைஞன் காலத்தை கடத்துகிறான். அவன் சொல்லத்துணியும்போது அவளுக்கு திருமணம் நடந்து விடுகிறது.

இந்த தொலைக்காட்சி நாடகத்தில் பாலவண்ணன், மொறீன் பெனெடிக்ற், கே. எஸ். பாலச்சந்திரன், எஸ். சர்வேஸ்வரன், ராஜகுலேந்திரன், திருமதி ராஜகுலேந்திரன், நவ்Fபர் முகமட் ஆகியோர் நடித்தார்கள்.

மாறுபட்ட விமர்சனங்கள் இந்த நாடகத்திற்கு கிடைத்தன.

No comments: